Wednesday, 25 January 2017

தலைவன் ஒருவன் இங்கில்லை..

சிங்கப்படையே புறப்படு 
புலிப்படையே பாய்ந்திடு 
குள்ளநரிக்கூட்டத்தை  வென்றிடு ..!!

கடாரத்தை கொண்டவன் நீ..
இமயத்தை கடந்தவன் நீ ...
ஆழ்கடலை ஆண்டவன் நீ ...!!

தன்னலமின்றி சேர்ந்ததிங்கு கூட்டம் ..
வெற்றியிங்கு வந்துன்னைச் சேரும் ..!!
வெறிகொண்ட வேங்கையென 
தமிழினம் சீரும் ...!!

அங்கொன்று இங்கொன்று 
என்றிருந்த சனம் இங்கு கூடி ...
சங்கே முழங்கு என ஆடுதம்மா பாடி ...!!

வெற்றி வாயில் இனி தூரமில்லை 
இழக்க இனி ஏதுமில்லை ..!!

மெரினா அலைகள் உயர்ந்து தாவும் ..
தூய தமிழ் பாதம் ...இனி கழுவும் ..!!

தலைவன் ஒருவன் இங்கில்லை..
எனினும்,
தடம்புரள நேரவில்லை ..!!

மெல்ல தமிழ் இனி வெல்லட்டும் ..!!
உலகம் யாவும் மெச்சட்டும் ...!!

தீப்பொறி

பெருத்த மூங்கில் காடொன்று 
பற்றியெரிய சிறு 
தீப்பொறி ஒன்று போதும் ..!!

தலைவணங்குகிறோம் 
சிறுபொறியிங்கு 
தீப்பந்தமென தனலாடுவதைக்கண்டு ..!!

ஐடி மட்டுமே அல்ல 
வாழ்வின் ஆதாரம் ..
இயற்கையை ஆராதித்த ஒரு 
தொல்குடி சமூகம் 
மேலெழுந்து வரட்டும் ..!!

நம் பொறுமல்கள் 
இடியோசை எனபல்கிப்பெருகி 
வருணனின் இருண்ட 
கதவுகளைத் தட்டட்டும் ..!!

தன்பெண்டு தன்பிள்ளை 
என்றிருக்கும் ஒரு 
தலைமுறையினைத் 
தட்டி எழுப்பட்டும் ...!!

நம் ஆறுதலும் ஆதரவும் 
நம் கவனமும் மரியாதையும் 
விவசாயிக்கு எப்பவும் உண்டு 
எனத்தெரிந்தாலே போதும் ..
அவன் தூக்கியெறிவான் தூக்குக் கயிறை ..!!

அதைச்செய்வோம் முதலில் ..!!

நெஞ்சு நொறுங்கி போச்சுதய்யா ...

விதை நெல்லு வாங்கிவச்சு 
நேரம் பாத்து விதைச்சுப்போட்டு 
வீதியில நிக்கிறோம்,
மழைத்தண்ணி இல்லாம ..!!

மாடி மேல மாடி கட்டி 
தார் ரோடு ரெண்டு போட்டு 
வயக்காட்டைப் பிரிச்ச 
சனம், ஏசி கார்ல போகுதையா 
மான ரோசம் இல்லாம ..!!

மழ வெள்ளத்துல நீங்க 
பரிதவிச்சி நின்னீங்க...
பதைபதைச்சு வந்தோமே 
பாவிமனம் கொள்ளாம ..!!

நஷ்ட ஈடு வேண்டி 
நீதி கேட்டு நிக்கையில,
நாவறண்டு போனதயா...
மொட்ட வெயிலு 
தாங்காம ..!!

அட ..வெயிலு தாகம் 
நாங்க பார்த்ததுதான் ...
நெஞ்சு நொறுங்கி 
போச்சுதய்யா ...
சர்க்காரு போலீஸ்காரன் 
அடிக்கிறான் 
வயசு வித்யாசம் பார்க்காம..!!

எடுத்துருவோம் 
முழக்கயிற ...
தொங்கிடத்தான் நினெக்கிறோம் ...
பாசத்த உள்வச்சி  எங்க சனம்,
எதிர்பாத்து நிக்குதய்யா 
உங்களுக்கு 
போய்விடுமா எட்டாம ...??!!

வாழ்க புத்தாண்டு நம்பிக்கை ..!!

வருடமெல்லாம் 
வறண்டிருந்தாலும் வாடியிருந்தாலும் ,
வருடக்கடைசி நாளில்,
நாளைய பொழுதாவது 
நல்லபடியாக 
விடியாதா ?, நாளும் நம்முழைப்பு 
நன்மதிப்பு பெறாதா ..?, 
நாம் கொண்ட ஆசைகள் 
நிறைவேறாதா ?,
என்று சாமானியனின் 
சந்தேக ஏக்கங்கள் 
சடுதியில் மறைந்திட வா 
புது வருடமே ..!!

எங்களுக்குள்ளே சாதி மத பேதங்களை 
இனியாவது களைந்து,
ஏற்றத்தாழ்வு மறைந்து,
சமூக நீதி தா 
புது வருடமே ..!!

பாதை பல புரட்டிச் சென்றாய் ..
காதை பல உணர்த்திச் சென்றாய் ..
ஆசை நூறு தந்து சென்றாய் ...
கடமை பல சுமத்திச் சென்றாய் ...2016

இனி வரும் காலம் வசந்தமாக இருக்கட்டும் ..!!
கடமையையும் பொறுப்பையும் 
உணர்த்திச்  செல்லட்டும் ..!!

வாழ்க புத்தாண்டு நம்பிக்கை ..!!

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!!!

கலைந்துலையும்

கலைந்துலையும் மேகங்களைக் 
அணுக்கத்தில் 
கண்டிருக்கிறீர்களா..?

அந்தியில்
கூடடையும் பறவைகள் 
தங்களுக்குள் பேசிக்கொள்வதென்ன ..?

மலர்விட்டெழும் 
மென்மணம் எக்கணம் 
வெளியேறுகிறது?

கரைமீளும் அலைத்துமி 
மீள்வதெத்துளியில்..?

அனல் உண்டு அனல் 
எழுகையில் 
எந்தச் சருகு 
எரிந்தமைந்தது ..?

சூழ்க்காற்று 
சுற்றிஅலைகையில் 
சொல்லத்துடிப்பதென்ன?

அறிவது அரிது அங்ஙனம்..!!
உணர்வது ஒன்றே பெருந்தவம்..!!

ஆதி உயிரின் ஆசி



கண்விழித்தோகையாக கன்னி நீ 
என்னருகில் 
இருக்கையில், மோகமிங்கு 
மேகக்கூட்டம் போல் 
செழிக்கும்..!!

முன்னெற்றி வியர்வை 
என் உதடு பட்டு இனிக்கும்..!!

கட்டில் பிடி உன் கை 
பட்டு நெறிபட 
காட்டுதீயொன்று நம் தேகமெங்கும் 
பற்றியேறும்..!!

நாணமிங்கு விடைபெற 
துடித்து, உன் மேனியெங்கும் 
ஒளிந்தோடத்துவங்கும்..!!

திருமேனி பற்றிய உன் 
பொன்னாடை, நழுவவா, வழுவவா 
என படபடக்கும்.
தாமரை மொட்டுக்கள் இரண்டும் 
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க 
விடுதலைக்கு ஏங்கி நிற்கும்..!!

அள்ளிக்கொண்டதும், தேக அணுக்கள் 
பாஸ்பரஸாய் பற்றிக்கொண்டு,
நீர்  பட்ட கனல் போல, இதயம் இரண்டும் 
காற்றுமிழும்.

ஆடைகள் அகன்று, நாணம் நகன்று 
அணுக்கம் பயின்று,
காமம் சூடி, காதல் வென்று, ஒருவருள் இருவரும் ,
இருவருள் ஒருவரும் ஒன்றுணர்ந்து 
எழுந்து அமைந்து நுகர்ந்து இழந்து பெற்று 
கொண்டு கொடுத்து 
அடைந்து அமைவதே ஆதி உயிரின் ஆசி..!!
வாழ்க காதல் ..!!

குறுஞ்செய்தி-தூவானம்



பின்னிரவு மழை 
பெய்தோழிந்த வேளையில் ..
வந்துவிழும் உன் அலைபேசி 
குறுஞ்செய்தி 
சொல்லாமல் சொல்கிறது 
தூவானம் இன்னும் விடவில்லையென..!!

இது போல் மழை விழும் 
பல மாலைகளில் 
நாம் கைகோர்த்து 
காதல் வளர்த்திருந்த நனவுகள் 
நினைவில் மீண்டெழுந்தன..!!

அன்றொருநாள் 
நீ , நான் , மழைத்துளி மட்டுமேயான 
முன்னிரவுப் பொழுது.
நம்முடன் நம் 
காதலும் நனைய,
ஊற்றெடுத்தது புத்தம்புதிய காதல்.

கணந்தோறும் பெருக்கெடுத்து 
நிதம் பெருகும் 
உன்மத்தம் இது.
தேய்வழக்கின்றி சொல்லிங்கு 
அமைய,
பொங்கிவரும் தேன்துணுக்கு கவிதை.

நின் பெயரின்றி 
சொற்றொடர் அமைவதில்லை.
நம் இணையின்றி 
இங்கு 

காதல் அமைவதில்லை..!!