காணி நிலத்தில் பத்துப்பன்னிரெண்டு தென்னைமரம்
கேட்டான் எங்கள் பாரதி..!!
கூடவே மீத்தேன் தென்றலையும் வழங்கிடுவோம்..!!
குயிலோசை கொஞ்சம் ஒலித்திட ஆசை கொண்டான்
அவற்றுடன் ஆழ்துளை இயந்திர பேரிசையையும்
கொடுத்திடுவோம்..!!
ஆழங்களில் உறையும் கரியமில அரவங்களை
தட்டி எழுப்புகிறோம் ..
அவை ஆற்றப்போகும் பேரழிவென்ன
யாமறியோம்..!!
தேர்தல் நேர வாக்குறுதிகளாய்
பசுமையான டெல்ட்டா பகுதி ..
மிச்சமென்ன இருக்கப்போகிறது, நம் பிள்ளைகளுக்கு
இன்றே காட்டிவைப்போம்..!!
தேனினிக்கும் கிணற்று நீர்,
வெள்ளி மீன் துள்ளிய ஆற்று நீர்
இனி புண் சீழ் கழுவிய
சேற்று நீர்தானோ..??
அகண்ட காவிரி நலிந்து போனாள்..
மெலிந்த மார்புகளில் இரத்தம்
உறிஞ்சுவீரோ..??
கண்மாய்களில் பறந்தலைந்த
நாரைகள்
இறந்தொழிந்த சேதி
அறிந்தீரோ..?
பூமித்தாயின் மடி கருக்கியபின்
கூடிப் பேய்கள் வாழ்வீரோ
இவள் வயிற்றுப் பிள்ளைகள் தானே..
இரும்புப் பாளங்கள் கொண்டு
பெருவயிற்றைப் பிளப்பீரோ..??
நீள்துயில் தங்கள் கொள்கையென
எங்களுக்கு ஓர் அரசு..!
கைகட்டி வாய்பொத்தி பெருமன்னனின்
சீழ்க்கை ஒலிக்கு
அடவு கட்டி ஆடுது எங்கள் அரசு..!!
கொள்கை என ஒன்றில்லை
உங்களுக்கு..... வீணர்
சொல்நம்பி, சென்மப்பிழை
செய்தோம் ...!!
வெண்ணாடை உடுத்தி கீழ்க்கும்பிடு
போட்டு வந்தவர்க்கு,
எங்கள் மரண சாத்தென அறியாமல்
ஓட்டளித்தோம்...
தீங்கிழைத்தோம் வருந்தலைமுறைக்கு...
மீள மாட்டோம் இப்பாவத்தினின்று...!!
-----அனலோன்