அலைகளுக்கும்
கரைக்குமான
தூரம் அளக்கப்படுவதில்லை..!!
எழுந்தடங்கி, தவித்தலைந்து
ஒவ்வொருமுறை
முயன்றும்
கரையின் கரையானது
விரிந்தபடியே செல்கிறது..!!
இதுதான் கரையின்
எல்லை என
கணக்கிட்டவர் உண்டோ..?!!
புலரி விடியும் நொடிப் பொழுதோ
பூவின் மொட்டு விரியும்
கணப்பொழுதோ
வரையறுக்கப்பட்டதில்லை..!!
மின்னற் சங்கிலி
வெட்டி எழும் நொடியின் நொடியில்
தோன்றி மறைகிறது
தோட்டத்து தென்னங் கீற்று..
அதே காட்சி
மறுபடி தோன்றும் என்பது
நிச்சயமில்லை..!!
கூடமர்ந்த கூகையின்
சோம்பல் உதிர்த்த சிறகொன்று
சென்று சேரும்
இடமும் அறியக்கூடுவதில்லை..!!
---- அனலோன்
No comments:
Post a Comment