Thursday, 13 July 2017

காவியின் நிறம் கருப்பு

கோவில் பல 
நிறைந்த 
சிறுநகர தஞ்சையில் 
நினைவறிந்த நாள் முதல் 
அத்தர் மொஹல்லா மசூதியின் 
பாங்கு ஒலி கேட்டே 
விழித்திருக்கிறோம்..!!


சந்தனவாசம் வீசும் 
மயில்தோகை கொண்டு 
குறுந்தாடி முல்லா 
கையால் 
மந்திரித்ததும் உண்டு..!!


தூய.அந்தோணியார் பள்ளியில் 
பரமபிதாவையும், சூசையப்பர் 
திருத்தல பிரார்த்தனையையும் 
கடந்து 
தேர்வுகளை நாங்கள் சந்தித்ததில்லை..!!


பிரகதீஸ்வர சிவசந்நிதியும், கோட்டை 
தேவாலயமும், நாகூர் தர்காவும் 
எங்களுக்கு 
போதித்தது அன்பை மட்டுமே..!!


நாதஸ்வரங்கள் முழங்க 
நாகூர் கந்தூரி திருவிழாவில் 
ஹஸ்ரத் ஷாகுல் ஹமீதை 
தரிசிக்கிறோம், வேளாங்கண்ணி மாதாவையும் 
வணங்குகிறோம்..!!


கிருஷ்ணனின் மூத்தவனாம் 
அரிஷ்டநேமி, அருகனடி 
அறிந்திருக்கிறோம்..!!


புதுக்காவிகள் எங்களுக்கு 
தேசபக்தியை ஊட்டத் 
தேவையில்லை..!!
வன்மம் பலபேசி குடும்பம் 
கலைப்பார் வாழ்ந்த 
சரித்திரம் இல்லை..!!

அன்பெனும் மதம் ஒரு காட்டாறு;
மதங்கள் அதில் கலக்கும் 
சிறுநதிகள். காட்டாறு தன்வழி கண்டு 
தயக்கங்கள் உடைத்து தரணியை 
வாழச் செய்யும்..!! மனிதம் வாழச் செய்யும்..!!

மதங்களை விட மனிதம் 
நம்புகிறோம்..!!
தெளிந்த வானம் 
எங்களுக்கு மேலே விரிந்து கிடக்க 
தேவன் அருள் பெற்றே 
வாழுகின்றோம்..!!


---- அனலோன் 

No comments:

Post a Comment