முக்கண்ணன் முதல்வன் என
பேறுபெற்றாய்,
இருந்தும்
பேரவனியில் பெருந்துயர் உற்றாய்..!!
கருத்த சரீரம்
சூல்கொண்ட மேகமென பாடல் பெற்றாய்,
ஆனால்
சிறுவுடல் தெருநாயென
துயரப்பட்டாய்..!!
பிடியானை தலைமையில்
குடும்பம் கொண்டு,
கொற்றவை போல்
குலம் காத்தாய்..!!
நீ நடந்த தலைமுறைப் பாதையெங்கும்
விடுதி கட்டி, வீடுகட்டி,
அடங்காமல்
சுயநல மாந்தர் யாம்
மின்வேலியும்
அமைத்து வைத்தோம்..நாங்கள்..!!
நகரும் பாறைக்குன்றென
மேய்ச்சல் நிலம் தேடி
நித்தம் அலைந்து அல்லலுற்றாய்..!!
சில்லறைக்காசுக்காக
சுட்டெரிக்கும் வேளையில்
கையேந்தி இரக்கும் போது
காட்டரசனின் இறந்த
காலங்கள் கண்முன் வந்து போகுமோ..?
கன்று, குட்டி கூட்டிச்சேர்த்து
கதையாடிச்
செல்கையில்
இருப்புப்பாதை எமனாக
இடித்துத் தள்ளி
குலமழித்தோம் மனிதர் நாங்கள்..!!
குடித்துக் கூத்தாடி
கண்ணாடிப் போத்தல்கள்,
காற்றிலலையும் நெகிழிகள்,
வன்மம் கொண்டு
காட்டிலெறிகிறோம் நாங்கள்..!!
பசித்தலைந்து நீ திரிகையில்
பசும்புல் தன்னுள் மறைந்த
நெகிழிப்பைகளை உண்கிறாய்..!!
வஞ்சமறியா வயிற்றினுள்
நெகிழிகள் நெகிழ்வதில்லை..!!
மென்பஞ்சு பாதத்தில்
சீழ் சேர்ந்து, புழு அடைந்து
ஜீரணம் கொள்ளாமல்
சீக்கில் நீங்கள் சாகும்போது
குரூரமாக
குதூகலிக்கிறோம் நாங்கள்..!!
என்றோ ஒருநாள்
வஞ்சினம் கொண்டு
நீ
ஊர்புகுந்து
பலிகொள்கையில்
திகைத்தடங்கி சாகிறோம்..
சிற்றுயிர் ஜீவனாக நின்
காலடி பணிகிறோம்..!!
--- அனலோன்
No comments:
Post a Comment