தன்னொளி கிறங்கி,
இறக்குமதி போத்தலுடனான
ஒரு
பின்னிரவில், எளிய
மின்னணு அலைவரிசை மீதேறி
எனது செல்லிடப்பேசியில்
வந்தொளிர்ந்தது குறுஞ்செய்தி,
"சத்யா " எனும் உன் பெயர் தாங்கி..!!
எத்தனையோ நாள்
எரிந்து விழுந்திருக்கிறேன்
உன் குறுஞ்செய்தி
எதிர்பார்க்கையில் வந்து விழும்
வங்கிக்கடன் விளம்பரங்கள் கண்டு..!!
ஒரு மாலைநேர மழையினூடே
நம்மிடையே உண்டான
பிணக்கு கணந்தோறும் வளர்ந்து
உருமாறுமென நீயோ நானோ
நினைத்திருக்கவில்லை..!!
எத்தனையோ நாள்,
அறுந்து போன நம் உரையாடல்கள்
காற்றின் அலைவரிசையில் என்னைப்
பின்தொடர்வதை
உணர்ந்திருக்கிறேன்..!!
முடிவிலியென
பரந்து விரிந்திருக்கும்
இப்பிரபஞ்ச பெருவெளியில்
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்களின்
ஈரப்பதமும்
கலந்திருக்குமோ..?
நாம்
சொல்லொணாத் துயருடன்,
அருகருகே பயணித்தாலும்
தொட்டுக்கொள்ள முடியாத
புகைவண்டித் தடங்கள் தாமோ..?
ஆனால்,
யதார்த்தங்களின் சிடுக்குகள்
நிறைந்த இவ்வுலகில்
இத்தனை நாள் காதலெனும்
பெருஞ்சரடு மட்டுமே நம்மை இதுவரை
பிணைத்து வந்திருக்கிறது..!!
கிளையமர்ந்த சிறுபறவை
விண்நோக்கி எழும், கணத்தின்
ஒரு துளியில் நம் காதல்
பேருருவம் கொள்ளும்..!!
எக்கணம் ..? அக்கணம் ..?
மரணமோ ..பின்போ ...முன்போ ..
எக்கணமும் சாத்தியமே..!!
---அனலோன்
No comments:
Post a Comment