Friday, 9 June 2017

அனுதினம் புழுக்களோடு...




உளம் குவித்து 
நான் கோவிலில் நின்றிருக்கையில் 
உள்ளுணர்வு உந்த திரும்பிப்பார்க்கிறேன்..
என் உள்ளாடை விளிம்பை 
உற்று நோக்கி 
சட்டென விழி விலக்குகிறாய்..!!



இதில் நீ அடைவதென்ன ..?
அடைந்ததென்ன ..? எண்ணிப் பார்க்கிறேன்..!
என் அருவருவருப்பை மட்டுமே..!!



நாள்முழுதும் 
கணினி முன்  ஆவி படைத்து அல்லது 
வரவேற்பு பொம்மையாய் கால்கடுக்க நின்று 
பசி கிள்ள, சிலசமயம் மாதாந்திர அவஸ்தையும் 
கொண்டு,  மனிதக்கூட்டம் தளும்பி வழியும் 
பஸ்ஸைப் பிடிக்கையில் 
வேர்வையோடு வேர்வையாக 
உன் காமக்கைகளும் என்  மேல் ஊர்கின்றன ..!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
எங்கள் உளவியல் சற்றே உன்னதமானது..!
வீடு சேர்ந்து ஆடை களைந்து 
பலமுறை குளித்தாலும் 
புழுக்கள் ஊறிய சீழாய் மேனியெங்கும் 
ஊர்ந்த தடங்கள் ..!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
எங்கோ ...எவ்வண்ணமோ 
உன் வீட்டுப் பெண்களும் அதே 
உளவியல் கொண்டவர்களென..!! 



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
உடலியல் கூறில்...ஒரு 
சமூக வடிகால் உங்களுக்கு 
கையளிக்கப்பட்டிருக்கிறது..!!
அதுவும் எங்களுக்கு இல்லை..
ஒருவகையில் நாங்கள் 
சபிக்கப்பட்டவர்களே...!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
சற்று முன்னேறி 
அலுவலக மேற்படியில் உனக்கு 
மேல் அமர்ந்திருக்கையில், 
எனது ஒழுக்கம் சார்ந்த விவாதமே 
உனது அலைபேசிப் பகிரியில் அதிகம்..!!



நீ எண்ணியே பார்ப்பதில்லை..
அனுதினம் நீ வழிபடும் 
ஆதி முதல் தாயின், கருப்பையே 
எங்களுக்கும்..!!
கொல்வேல் கொற்றவையின் 
உருவமைப்பே எங்களுக்கும்..!!



நம்பிக்கை



தன் கூடு தானுடைத்து 
உருமாறும் புழுவே 
பட்டாம்பூச்சியாகிறது..!!


நீரலையில் மோதி மோதியே 
சிறுபடகு 
இலக்கை அடைகிறது..!!


உளியடி தன்னை 
தன்னில் நிறைத்து 
தயக்கமின்றி தம்முடல் 
ஒப்புவிக்கும் பாறையே 
சிலையாகிறது...!!


சுயத்தை இழந்து 
துளைகளை ஏற்கும் 
மூங்கிலே 
புல்லாங்குழலாகிறது..!!


புற்றரவு தன்னைத்தான் 
செதுக்கி செதுக்கியே 
புதுத்தோல் பூணுகிறது..!!


அன்னைப்பறவை  பறந்தெழுந்து 
வருக என
அழைக்கையில் சிறகை விரித்து
கால்களின் பிடியை 
முற்றிலும் விட்டுவிடும் 
குஞ்சுகளே 
வானை அறிகின்றன..!!




நினைவேந்தல்



பலநாள் முன்பு
அகால மரணமடைந்த
நண்பனுடைய  பிறந்தநாளின்
முகநூல்  நினைவுறுத்தல்
குறுஞ்செய்தி
கண்டு
ஒரு கணம்
திகைத்து அடங்கியது உள்ளம்..!!



குழந்தைப் பலி கொண்ட
வீட்டின்
உத்திரத்தில்
கட்டிய தொட்டிலின்
கயிற்றுத் தடம் உடனே
மறைவதில்லை..!!



அய்யம்மாள் கிழவி
தனித்து வாழ்ந்து
மரித்துப்போன சிலவருடம் பின்னும்
பாக்குடைப்பான்
திண்ணையிலேயே இருந்தது..!!



தொழுவம் கட்டிய
லட்சுமியின் கழுத்துச் சலங்கை
கோமாரி கண்டு செத்த பின்னும்
அவ்வப்போது காற்றில் சலசலத்து
அவளை நினைவுறுத்தும்..!!


மரணம் கொள்ளும் பயணம்





செங்கேழ் மேனி தொட்டு 
சிறிததிர்ந்து 
விலகி 
பின்னரும்  விண்ணில் மீண்டெழ 
முயல்கிறது 
சிறுபறவை உதிர்த்த இறகொன்று...!!

மரணித்த பின்னும் 
தன் பயணம் தன்னை 
கொண்டாடித் தீர்க்கிறது 
நெடுமரம் உதிர்த்த சருகொன்று...!!


நீள்நதி அலையில் 
மௌனமாய் பயணிக்கிறது
செஞ்சாந்து தீற்றல் களைந்து,
கரையோர காட்டு அய்யனார் 
சூடிய மாலையொன்று..!!

காட்டையாண்ட 
பெருஞ்சிறுத்தை காலம் கொண்டு 
வீழ்ந்திறக்க,
பருவுடல் தன்னை 
பகிர்ந்து நகட்டிச்செல்கிறது 
சிற்றெறும்புக்   கூட்டமொன்று..!!

அப்பாயி...எனக்கொரு ஆசை..!!




ஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..
எங்கோ ஆழ்மனதின் அடியாழத்தில் 
நீ இரவு முழுவதும் வீசிய 
ஓலைகாற்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது..!!


இருளேறிய மண்வீடு..
பனை உத்திரங்களும் ஓலைக்கூரையையும் 
பார்த்தபடி கிடந்துறங்கிய நினைவுகள் 
படிமங்களாக உறைந்து கிடக்கிறது..!!


மின்சாரம் இல்லாத 
அந்நாட்களில் சிம்னி விளக்கில் 
புளிக்குழம்பையும்,கரண்டி முட்டையும் 
இந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..!

அரிக்கேன் வெளிச்சத்தில் 
கால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய் 
மண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து  
புரியாத மொழியில் பாடிய தாலாட்டில் 
லயித்துக்கிடந்த சிறுவயதுப்பிராயம் 
திரும்பாது எனிலும், 
காலங்கடந்தும் நெஞ்சில் நிக்குதம்மா..!!


டயர் செருப்பு அணிந்திருப்பாய் ..
பனைவெல்லம் காய்ச்சுகையில் 
பதமாய் ..
சிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..!!
பொன்னாங்கண்ணி கண்மாயில் 
பனைஓலை வெட்டி 
கருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..!!
ஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி 
எனக்களித்தாய்..!!


என்ன தருவேன் நான் உனக்கு 
ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..?
அப்பாயி..
எனக்கொரு ஆசை ..நிறைவேற்றுவாயா ..??


எனக்கான தீர்ப்பு நாள் தாண்டி 
விண்ணேகி நான் வருகையில் 
நின்மடியில் படுத்து 
ஓலைக்காற்றை சுவாசிக்க வேண்டுமம்மா..!!
உன் கண்டாங்கி சேலை நுனி 
நான்பற்றி 
கண்துயில வேண்டுமம்மா..!!