Thursday, 4 May 2017

நீயில்லாத வீடு..

நீயில்லாத வீடு..வெறும் சுவர்ப்பரப்பே ..!!
விடாது ஒலிக்கும்
அழைப்பு மணியைப் பொருட்படுத்துவதில்லை 
அங்கங்கே சிதறிக்கிடக்கும் 
துணிகளும், வாரவிடுமுறையில் வாங்கிய உணவுப்பொட்டலங்களும்..!

கலைந்தே கிடக்கும் படுக்கை..
சிற்றெரும்பென இரவுகளில் அதில் 
ஊர்ந்து பின்காலையில் விழித்தெழுகிறேன்..!!

கரப்பான்களும், இன்னபிற 
பூச்சிகளும் 
அதனதன் விடுமுறைக்களிப்பில் சுதந்திரமாக 
திரிகின்றன..!! நீயிருக்கும் வரை அவை 
அண்டியதில்லை..!!

மின்விசிறிகள் நிறுத்தப்படுவதில்லை 
விளக்குகள் எரிந்து எரிந்து எரிகின்றன..இரவிலும்..!
முற்றிலும் விடுமுறைக்கால நகராட்சி பள்ளியாய் 
உணர்விழந்து கிடக்கிறது 
சமையலறை..!!

நீ உலவிய மிச்சங்கள் 
வரவேற்பறையின் காற்றில் எப்போதும்..!!
அழுக்கேறிய துணிகளும் 
மடிப்புலைந்த ஆடைகளுமாய் அலமாரி ..!!
கலையாமல் அடுக்கு குலையாமல் 
ஆடைகளை எடுப்பது எப்படி..?

வீடு வீடாக இருப்பதில்லை..
நான் நானாக மட்டுமே இருக்கிறேன்.. 
நீயில்லாமல் ..!!

தன்னிச்சையாக பொருட்கள் அதனதன் 
இடத்தை அடைகின்றன நீ வந்தவுடன்..!!
சர்வத்தையும் இயங்கச் செய்து 
கான்க்ரீட் சுவர்ப் பரப்பை 
உயிர்க்கச் செய்கிறாய் 
ஒற்றைக் காலடி வீட்டினுள் 
எடுத்து வைத்து..!!

--- அனலோன் 


No comments:

Post a Comment