Thursday, 4 May 2017

இரயில் விட்டுச் சென்ற வெறுமை



சிறுநகர புகைவண்டி 
நிலையத்தில் காத்திருந்திருக்கிறீர்களா ...?
நீங்கள் பயணிக்க வேண்டிய 
வண்டியைத் தவற விட்டிருக்கிறீர்களா ..?

நம்மைநோக்கி பச்சைக்கொடி காட்டி 
கடந்து செல்லும் 
நமக்கான வண்டி விட்டுச் செல்வது பல 

இரயில் கடக்க காத்திருந்து 
தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் 
இரட்டைத் தடங்கள் ..!!
அதிர்ந்தடங்கும்     நடைமேடை..

சற்றுத் தயங்கிப்பின் 
தன் குட்டிகளுடன் தண்டவாளம் தாண்டி கடக்கும் 
நாயொன்று..!!

பொதிமூட்டை சுமந்து 
அரைகுறை வாய்க்காலில் 
துவைக்க செல்லும் மூதாட்டி கடந்து 
செல்கிறாள்..!!

டீ விக்கும் பையன் 
மெதுவாக தன் 
செல்பேசியைத் தடவி பார்க்கிறான்..!!

பறந்தமர்ந்த காகங்கள் 
நிலைய கூரைக்குள் 
கரைந்து  அலைகின்றன..!!

அடுத்த வண்டி வருமுன் 
அதனதன் காட்சிகள் 
அரங்கேறுகின்றன..!!
அதன்பின் அதுவே தொடர்கின்றன ..!!

----- அனலோன் 

No comments:

Post a Comment