Thursday, 2 March 2017

புடவிச்சக்கரம்


காய் கனிந்துதிர்கையில் 
காம்பிடம் சொல்லிப் 
பிரிவதென்ன?

என்றோ ஒரு நாள் 
ஏதோ ஓர் உலகில் 
எங்கோ ஒரு கிளையில் 
மீண்டும் 
சந்திப்போம் என்றா ..?

புள் சிறகு மூத்து உதிர்கையில்,
பறவையிடம் பகர்ந்து 
செல்வதென்ன ..?

எந்தத் திசையில் 
எந்தப் பறவை 
எந்த நிறம் என்றா ..?

புற்றரவு செதில்கள் 
பிரிந்து விழுகையில் 
எண்ணிக் கொள்வதென்ன ..?

யா வடிவம் 
எந்தப் புற்று 
எந்த காடு என்றா ..?

இப்புடவியில் .. நாம் 
அறிந்ததுதான் என்ன ..?
புடவிச்சக்கரம் தனை 
சுழலச் செய்வான் 
பரம்பொருள் அவன் அறியக்கூடுமா ..??

No comments:

Post a Comment