Thursday, 4 May 2017

விலகிடாத நேசம் ...!!



எண்ணியிராத நொடியொன்றில் 
அலைத்துமி என 
உன்  முகம் கண் முன் 
வந்து போகும்..!

பின்னொரு நாளில் 
சாலை கடக்கத் 
தயங்கும் பள்ளிக்குழந்தையின் 
பரிதவிப்பில், உன்  கை பிடித்து 
அலைந்த கணம் 
மின்னிச் செல்லும்..!!

எங்கோ எவ்வண்ணமோ 
இருந்திருக்க வேண்டிய நாம் 
சட்டென ஒரு புள்ளியில் 
விலகியிருக்க வேண்டாம்..!!

அந்நேர வலிதனை 
மரண நொடியின் வேதனைதனை 
ஒத்திபோட்டு ஒத்திப்போட்டு 
ஆழ் மனதின் இருண்ட 
அறைகளுக்குள் 
அமிழ்த்திஇருக்க வேண்டாம்..!!

நாம் இருவருமே 
அறிந்திருக்கவில்லை இவ்வண்ணம் 
நடக்குமென..

அல்லது நாமிருவருமே 
அறிந்திருந்தோம் ..இவ்வண்ணமே 
நிகழுமென ..!!

என் சொல்லி என்ன ஆவது ..?
தனித்தனி குடும்பங்கள், குழந்தைகள் இன்று.

ஆயினும், பண்டிகை தினம் 
புது ஆடை ஒன்று அணியும்போதோ ..

அலைநுரை காலடி பரவி 
மண்ணரித்து மீள்கையில், தெளிந்து 
வரும் சிப்பிகள் போல 
உன் நினைவுகளை 
உதற முடிவதில்லை...!!

-------- அனலோன் 

No comments:

Post a Comment