Friday, 15 April 2016

ஆதி முதல் தாய்

வெண்ணிற பால் பந்தொன்று பிறந்து
6 வருடங்கள்  ஆகிவிட்டன ...!!
2010   ஏப்ரல் ஏழாம் திகதி அதிகாலை
பூமிப் பந்தை தன பூக்கால்களால்
மிதிக்கிறாள் பூமகள் ..!!

முதல் மூச்சும் , அழுகையும்
உணர்ந்த மாத்திரத்தில் ,
எனக்கு நெஞ்சுகுழி அடைக்கிறது..!

வான் விட்டு மண் வந்த 
விண்ணவர்கோன் தம் மகளல்லவா ..!!
எப்பவும் அதிகாரம் தான் .

பிறர்தம் சிறு சோகக்கதைக்கு கூட 
கண்ணீர் சொரிவாள்..!!
சீதையை இராமன் மீட்ட கதையை சொன்னால் ,
கேட்கிறாள், " ஏம்பா ...ஹனுமான் தான் 
மலைலாம் தூக்கினார்ல ...அதே மாதிரி எல்லாரையும் 
தூக்கிட்டு போயி லங்கால இறக்கிருக்கலாம்ல ??
ஏன் கஷ்டப்பட்டு Bridge கட்டணும்??!!"

" நீ தாண்டா என்னைப்பெத்தவ " னு 
சொன்னதற்கு அவள் கேட்கிறாள்,
" பின்ன எப்படிப்பா நான் அம்மா வயித்துக்குள்ள 
போனேன் ??".

 விடிகாலை அழகில் அவள் தூங்குவதைப் 
பார்க்கவேண்டுமே ..!! அடடா 
கோடிப்பூக்களைக் கொட்டி வைத்த 
பூக்களம் போலிருப்பாள் ..!!

அவள் பூமடியில் 
சற்று கண்ணயர்ந்தால் நம்முள் 
பாற்கடல் வாசனை உணரலாம் ..!!
ஆதி முதல் தாய் எளியவனின் 
மகளாய் அவதரித்திருக்கிறாள் 

அவள் பூப்பாதங்களில் 
எந்நேரமும் 
தேன் வாசனை ..!! 
முன்னம்பல் இரண்டும் 
முற்றிழந்தாலும் புன்முறுவல் பூக்கையில் 
தெய்வசாயல் படைக்கிறாள்..!

No comments:

Post a Comment