Friday, 15 April 2016

கூடலின்றி அமையாதுலகு ..!!

பெருந்திரள் மேகங்கள் 
திரளக் கனாகண்டேன் தோழி 

பொன்திரை மெல்ல இறங்கிவர 
மின்மினிகளின் 
ஊர்வலம் கண்டேன் 

மெல்வண்டுகளின் ரீங்காரம் 
மெல்லத்தொடங்கக் கேட்டேன் 

மேனியெங்கும் தொட்டுப்பரவும் 
தென்திசை காற்று.
கூடணைய எண்ணும்  
பெயரறியாப் பறவை உன் பெயர் 
உச்சரித்துச் செல்லும்.

நிகர்நிகழ் காலத்து 
மெய்ம்மை துரத்திடினும் 
மெல்ல கணினி தன்னுயிர் அடங்கும்.

வாகையின் மென்தூவல் கடந்து 
உன் அருகாமை எண்ணும்போது 
நீ வாங்கி வரச்சொன்ன மல்லி மணக்கும்.

அலுவலகக்கூண்டினின்று அகன்று 
நம் கூடணைய விழையும் வேளை 
மெல்ல காதல் பூ விரியும்.
ஆம்...
கூடலின்றி அமையாதுலகு ..!!

தந்தையுமானவள் ..!!



தனிப்பெருங்கருணையும் 
பெருங்கோபமும் 
ஒருங்கே கொண்டவள்..!!

சீரமைந்த சொற்களும் 
சீரெழுந்த நடையும், பெயரையொத்த 
பூரணமும் உடையனள்..!

கொற்றவை தம் குணம் போல் 
அறுகை ஆயுதம் அவள் ஏந்துவதுண்டு.
அடுத்த கணம் நூறுகை 
அருள் மொழிவதுண்டு..!! 

சிறுமதி அவளைத் 
தீண்டுவதில்லை. இடித்துரைப்போருக்கும் 
சிறுநகை  அன்றி பிற 
உதிர்ப்பதில்லை ..!!

நானின்றி குடும்பம் தனை 
அவள் புரக்கக்கூடும்..!!
அவளின்றி நான் 
உயிர் துறக்கக்கூடும்..!!

சென்மம் ஏழு செய்தேன் போல 
புண்ணியம் பல.
அதன் பலனே அம்மையை 
அடைந்தேன் வாழ்க்கைத்துணையாய்..!!

என் குலம் தழைக்கும் 
உன் நற்குணம் பல கொண்டு..!!
இறைஞ்சுகிறேன் இறைவனை 
ஆயுள் பல வேண்டி..
வாழவேண்டும் 
உன்னோடு...!!

ஆதி முதல் தாய்

வெண்ணிற பால் பந்தொன்று பிறந்து
6 வருடங்கள்  ஆகிவிட்டன ...!!
2010   ஏப்ரல் ஏழாம் திகதி அதிகாலை
பூமிப் பந்தை தன பூக்கால்களால்
மிதிக்கிறாள் பூமகள் ..!!

முதல் மூச்சும் , அழுகையும்
உணர்ந்த மாத்திரத்தில் ,
எனக்கு நெஞ்சுகுழி அடைக்கிறது..!

வான் விட்டு மண் வந்த 
விண்ணவர்கோன் தம் மகளல்லவா ..!!
எப்பவும் அதிகாரம் தான் .

பிறர்தம் சிறு சோகக்கதைக்கு கூட 
கண்ணீர் சொரிவாள்..!!
சீதையை இராமன் மீட்ட கதையை சொன்னால் ,
கேட்கிறாள், " ஏம்பா ...ஹனுமான் தான் 
மலைலாம் தூக்கினார்ல ...அதே மாதிரி எல்லாரையும் 
தூக்கிட்டு போயி லங்கால இறக்கிருக்கலாம்ல ??
ஏன் கஷ்டப்பட்டு Bridge கட்டணும்??!!"

" நீ தாண்டா என்னைப்பெத்தவ " னு 
சொன்னதற்கு அவள் கேட்கிறாள்,
" பின்ன எப்படிப்பா நான் அம்மா வயித்துக்குள்ள 
போனேன் ??".

 விடிகாலை அழகில் அவள் தூங்குவதைப் 
பார்க்கவேண்டுமே ..!! அடடா 
கோடிப்பூக்களைக் கொட்டி வைத்த 
பூக்களம் போலிருப்பாள் ..!!

அவள் பூமடியில் 
சற்று கண்ணயர்ந்தால் நம்முள் 
பாற்கடல் வாசனை உணரலாம் ..!!
ஆதி முதல் தாய் எளியவனின் 
மகளாய் அவதரித்திருக்கிறாள் 

அவள் பூப்பாதங்களில் 
எந்நேரமும் 
தேன் வாசனை ..!! 
முன்னம்பல் இரண்டும் 
முற்றிழந்தாலும் புன்முறுவல் பூக்கையில் 
தெய்வசாயல் படைக்கிறாள்..!